அங்கே யூதர்கள் இருந்தார்கள்; இஸ்ரேல் இருக்கவில்லை.
(அறிந்ததும் தெரிந்ததும் -பகுதி18)
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
ஜெருசலேம்! சும்மா பெயரைக் கேட்டாலே ஆத்மீகம் வழிந்தோடும் ஒரு நகரம். உலகின் மூன்று பெரிய ஏகத்துவ மதங்களுக்கு வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த பூமி: யூத, இஸ்லாமிய, மற்றும் கிறிஸ்தவ மதங்களின் பூர்வீக இடம், வரலாற்று நிகழ்வுகளின் தரிப்பிடம். இதனால் தான் என்னவோ இது Yeru shalayim - அமைதியின் பூமி என்ற பெயரில் அழைக்கப்படலாயிற்று. பெயரிலேயே சாந்த சொரூபியான இந்த நிலப் பகுதி தான் மறுபுறத்தில் வரலாறு முழுக்க பல்வேறு இரத்தக் களரிகளை கண்ட ஒரு யுத்த மைதானமாவும் இருந்து வருகிறது.
ஜெருசலேமில் முதன் முதல் மனிதக் குடியேற்றங்கள் ஆரம்பகால Bronze Ageன்(3500 BC) போது நிகழ்ந்தன என்று வரலாற்று அறிஞர்கள் நம்புகிறார்கள். அதன் பின்னர் கிறிஸ்துவுக்கு முன் 721 BCல் - Assyrians னால் முதலாவது ஆக்கிரமிப்பு அங்கே நிகழ்த்தப்படுகிறது. ஆனால் இது சாதாரணமாக கடந்து போகும் ஒரு வரலாற்று நிகழ்வாகவே அமைந்து விடுகிறது. இதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் தான் வரலாற்றை புரட்டிப் போடுபவனவாக மாறுகின்றன. ஜெருசலேமுக்கு புனிதத்தை பெற்றுக் கொடுக்கின்றன.
கிறிஸ்துவுக்கு முன் 1000ம் ஆண்டில், தாவீது/ தாவூத் நபி ( David)மன்னர் ஜெருசலேமைக் கைப்பற்றி யூத ராஜ்யத்தின் தலைநகராக அதை மாற்றுகிறார். அது வரைக்கும் ஏனைய நகரங்களைப் போன்று சாதாரணமாக இருந்த ஜெருசலேமுக்கு வரலாற்றில் அழியாத இடம் கிடைக்கத் தொடங்குகிறது. அதையொட்டிய வரலாற்றுச் சிக்கலும் ஆரம்பிக்கத் தொடங்குகிறது.
தாவீதின் இரண்டாவது மகன் சாலமன்/சுலைமான் (Solomon) சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெருசலேமில் கடவுள் வழிபாட்டிற்காக புனித ஆலயம் ஒன்றை கட்டுகிறார். இந்த நிகழ்வே ஜெருசலேத்திற்கு புனிதத் தன்மையை பெற்றுக் கொடுக்கும் ஆரம்பப் புள்ளியாக அமைந்து விடுகிறது. பின்னர் இந்த ஆலயமே, யூதர்களின் முதலாவது புனித கோவிலாகவும், முஸ்லிம்களின் முதாலாவது கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவாகவும் உரிமை கோரலுக்கு உள்ளாக்கப்படுகிறது. இதுவே வரலாறு முழுவதிலும் நீடித்துச் செல்லும் இந்தப் பிரச்சினையின் இடியப்ப சிக்கலுக்கான இழையாகவும் அமைந்தது விடுகிறது.
கால ஓட்டத்தில் ஜெருசலேமில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. அவைகள் எல்லாமே இன்றைய பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு கட்டாயம் தேவையான ஒன்றாக இருக்கின்றன. கி மு 586 BCயில் பாபிலோனியர்கள் ஜெருசலேமை ஆக்கிரமித்து, முதலாவது புனித ஆலயத்தை அழித்துத் தரை மட்டமாக்குகின்றனர், யூதர்களை நாடு கடத்துகின்றனர். அதன் பின் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பாரசீக மன்னர் சைரஸ் எருசலேமை கைப்பற்றுகிறார். யூதர்கள் ஜெருசலேமுக்குத் திரும்பவும், புனித ஆலயத்தை மீண்டும் கட்டவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் தான் யூதர்களின் இரண்டாவது புனித ஆலயமும் கட்டியெழுப்படுகிறது.
அப்படியே காலம் உருண்டோடுகிறது, க்ரேட் அலெக்சாண்டர் 332BC ல் ஜெருசலேமை கைப்பற்றுகிறார். தனது ஆட்சியை விஸ்தரிப்பு செய்கிறார். உரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக ஜெருசலேம் மாறிவிடுகிறது. இந்த நிலையில் கிறிஸ்துவுக்கு 37 ஆண்டுகளுக்கு முன் , King Herod மன்னர் இரண்டாவது ஆலயத்தை மறுசீரமைத்து, அதில் புனித சுவர்களைச் சேர்க்கிறார்.
30 ADல் அதே ஜெருசலேம் நகரில் இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். அங்கேயே மீண்டும் உயிர்த்தெழுகிறார். இதுவே கிறிஸ்துவர்களின் புனித நகராக ஜெருசலேம் மாறுவதற்கு காரணமாக அமைந்தது விடுகிறது. இதன் காரணமாக ரோமர்கள் ஆட்சியில் கிபி 70ல் யூதர்களின் இரண்டாவது புனித ஆலயமும் அழித்தொழிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிபி 335ல் இயேசுவின் புனித கல்லறை எருசலேமில் கட்டியெழுப்பப்படுகிறது. (Church of the Holy Sepulchre).
வரலாறு ஓடிக்கொண்டே இருக்கிறது. கிபி 621 இல் தீர்க்கதரிசியான முஹம்மது நபி அவர்கள் ஜெருசலேமில் இருந்து விண்ணுலகம் பயணம் ஏறிய சம்பவம் நடந்தேறுகிறது. இதுவே ஜெருசலேமுடனான முஸ்லிம்களின் உறவு மேலும் வலுவடைவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. அதன் பின்னர் கிபி 638ல் இரண்டாம் கலீபா உமர் அவர்கள் ஜெருசலேமை தரிசிக்கிறார்கள். ஜெருசலேமின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். இது குறித்து விரவாக அறிய எனது முன்னைய இந்த பதிவு உதவி புரியும். https://m.facebook.com/story.php?story_fbid=602239980503182&id=394132221313960
கிபி 1099 சிலுவைப் போராட்ட வீரர்களால் கைப்பற்றப்படும் வரையான காலப்பகுதியில் ஜெருசலேம் பல்வேறு முஸ்லிம் ஆட்சியாளர்களால் மாறி மாறி ஆளப்படுகிறது. இந்த கால காலகட்டத்தில் தான், கிபி 691ல் முஹம்மது நபி அவர்கள் விண்ணுலக யாத்திரை சென்றதாக நம்பப்படும் இடத்தில் Dome of Rock எனும் பள்ளிவாசல் கலீபா அப்துல் மாலிக்கினால் கட்டி எழுப்பப்படுகிறது. இந்த பள்ளி வாசல் அமைந்த பிரதேசமே தங்களது அழிக்கப்பட்ட இரண்டாவது புனித ஆலயம் இருந்த இடம் என்பதாக யூதர்களினால் சர்ச்சை உருவாக்கப்படுகிறது. அந்த சர்ச்சை இன்று வரையில் முடிவின்றியே தொடர்கிறது.
கிபி 1099-1187 வரையான காலப்பகுதியில் மீண்டும் எருசலேம் சிலுவை போராட்ட வீரர்களின் கைகளுக்கு செல்கிறது. அதன் பின் மீண்டும் சலாஹூத்தீன் அய்யூபி அவர்களினால் எருசலேம் கைப்பற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 1917 வரையான காலப்பகுதியில் எருசலேம் முஸ்லிம்களின் ஆளுகைக்கு கீழே இருந்து வருகிறது. இந்த காலத்தில் 1250ம் ஆண்டில் எருசலேமின் எல்லை சுவர்கள் மம்லூக்கியர்களால் அழிக்கப்படுகின்றன. இருந்தாலும் மீண்டும் அதே சுவர்கள் உதுமானிய ஆட்சியாளர் சுலைமான் (Suleiman the Magnificent) அவர்களால் இடிக்கப்பட்ட இடங்களில் கட்டி எழுப்பப்படுகின்றன.
முதலாம் உலகப் போர் தொடங்குகிறது. அந்த நேரத்தில் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருந்த எருசலேமை பிரிட்டிஷார் கைப்பற்றுகின்றனர். அப்டியே ஜெருசலேமின் ஆட்சி ஆங்கிலேயர்களின் கைகளுக்கு செல்கிறது. அதன் பின்னரே பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கிறது. 1948 இல் இஸ்ரேல் ஒரு நாடு உருவாக்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில் நாலாயிரம் ஆண்டு வரலாற்றில், அஷிரியர்கள், பாபிலோனியர்கள், யூதர்கள், ரோமானியர்கள், பெர்சியர்கள், அரேபியர்கள், பாத்திமிகள், துருக்கியர்கள், சிலுவைப் போராட்டக்காரர்கள், எகிப்தியர்கள், மாம்லூக்கியர்கள், அரேபியர்கள், ஆங்கிலேயர்கள், என எல்லா ஆட்சியர்களாலும் இந்த நகரம் கைப்பற்றப்பட்டு மாறி மாறி ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது என்பது கண்கூடு.
ஆக மொத்தத்தில் நாலாயிரம் ஆண்டு வரலாற்றில், ஜெருசலேம் இரண்டு தடவைகள் தரை மட்டமாக்கப்படுகிறது. 16 தடவைகள் ஆட்சியாளர்களால் மாறி மாறி கைப்பற்றப்படுகிறது. 23 தடவைகள் முற்றுகையிடப்படுகிறது. 52 தடவைகள் தாக்குதலுக்கு உள்ளாகிறது. ஆனாலும் இவ்வளவு நடந்தும் இன்றைய திகதியிலும் தொடர்ந்தும் பேசப்படும் ஒரு புனித இடமாய் அழியாத பொக்கிஷமாய் அது இருந்து வருகிறது. அது தொடர்ந்தும் இருந்து வரும்.
இந்த வரலாறு முழுக்க யூதர்கள் இருந்தார்கள். இஸ்ரேல் என்ற ஒரு நாடு அங்கே இருந்ததில்லை. கிறிஸ்தவர்கள் இருந்தார்கள், இஸ்ரேல் என்ற நாடு இருந்ததில்லை. முஸ்லீம்கள் இருந்தார்கள் இஸ்ரேல் என்ற நாடு இருந்ததில்லை. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் உண்மை வரலாறு முழுக்க ஜெருசலேம் இருந்தது. அதன் கூடவே பலஸ்தீனமும் இருந்தது. அது எப்போதும் இருக்கும்.
Dr PM Arshath Ahamed MBBS MD
குழந்தை நல மருத்துவர்
ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று
பிற்குறிப்பு: இஸ்ரேல் எப்படி உருவானது. யூதர்கள் யார்? சியோனிஸ்ட்கள் யார்? போன்றவைகளை அடுத்த பதிவில் ஆராயலாம். இது குறித்து மேலும் அறிய ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொமணட் செக்சனில் குடியேறும் ப்ளீஸ்
No comments:
Post a Comment